தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் முடியும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவர் நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இந்த யோசனையை வழங்கியுள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவா நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது” என்று பேசினார்.
மருத்துவ நிபுணர் குழுவுடன் நடத்திய ஆலோசனை முடிந்த நிலையில், சட்டமன்றக் கட்சி உறுப்பினர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கார், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். இதனைத்தொடர்ந்து, முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக அரசு இன்று முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியதாக பதவியேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளளது.
இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 30 ஆயிரத்து 271 நபர்கள் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 ஆகும் . தொற்று உறுதியானவர்களில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 913 பேர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோர் உள்பட சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 782 ஆகும்.
இதன் காரணமாகவே ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர். மருத்துவ குழுவினரின் ஆலோசனை ஏற்று முதல்வர் ஸ்டாலின், ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பை இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று தெரிகிறது.