விழுப்புரம் மாவட்டம் குமளம் அடுத்த வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33) . இவர் 2004 ஆம் ஆண்டு தங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10  ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் ஒரு சேர வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . பின்னர் காய்ச்சலின் தீவிரத்தால் மெல்ல மெல்ல கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு தற்பொழுது , 80 சதவீத பார்வையை இழந்து வெறும் 20  சதவீத கண் பார்வையுடன் இருக்கிறார் .



ராஜேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த வேளையில், அவரது தாய் விசாலாட்சி ஒரு விபத்தில் சிக்கி தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது . மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி , இதுவரை விவசாய கூலி வேலை சென்று கொண்டு இருந்த விசாலாட்சி படுத்த படுக்கையாக வீட்டில முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று .


ஒட்டுமொத்த குடும்பமும் வறுமையில் சிக்கி தவித்ததால், ராஜேஷின் தந்தை சின்னதுரை குடும்பத்தை கைவிட்டுவிட்டு , ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டார் .ராஜேஷின் இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி தனியாக வசித்து வரும் சூழ்நிலையில் . பிழைக்க போதிய வருமானம் இன்றி , உண்ண ஒரு வேளை உணவு கூட இன்றி வறுமையில் சிக்கி தவித்தனர் ராஜேஷ் மற்றும் அவரது தாய் விசாலாட்சி .



நிரந்தர வருமானம் ஏதும் இல்லம் , அரசு மாற்று திறனாளிகள் துறையில் இருந்து வரும் 1000  ரூபாயை நம்பியே பிழைப்பு நடத்தி வருவதாகவும் . மேலும் இந்த பணம் தனக்கும் தனது தாய்க்கும் மருத்துவ செலவுக்கே பற்றாமல் இருப்பதால் , மாதத்தின் பெரும்பாலான நாட்களை  பட்டினியுடனே கழிப்பதாகவும் கூறினார் ராஜேஷ் .


தங்களது வீடு முற்றிலும் சிதலம் அடைந்து உள்ளதால் மழை காலங்களில் இருக்க இடம் கூட இன்றி கோவிலில்தங்கிவருவதாகவும் தெரிவித்தார் .  இதனை அறிந்து ABP நாடு செய்தி குழுமம் கடந்த புதன் கிழமை அன்று , ராஜேஷை தொடர்புகொண்டு அவரைப்பற்றிய செய்தியை "பார்வையில்லை... வீடில்லை... வேலையில்லை... தாயுடன் கோவிலில் தஞ்சமடைந்த மகன்!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது .


அதனை படித்த சென்னையை சேர்ந்த கைன்ட்னெஸ் கிட்டி (Kindness Kitty ) என்ற  நண்பர்கள்  குழுவினர் , ABP  நாடு மூலம் ராஜேஷின் தொடர்பு எண் பெற்று கண்பார்வை குறைபாடு உள்ள ராஜேஷை நேரடியாக தொடர்புகொண்டு அவருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர் .



இது தொடர்பாக கைன்ட்னெஸ் கிட்டி நண்பர்கள் குழுவை சேர்ந்த ஜெயா மகேஷ் நம்மிடம் பேசியபொழுது, ‛‛1993  - 1997 ஆம் வருடம் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களை கொண்டு இந்த கைன்ட்னெஸ் கிட்டி என்கின்ற நண்பர்கள் குழுவை , தமிழ் நாட்டில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய 2015  ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ஆரம்பித்தோம். இப்பொழுது நண்பர்கள் , தன்னார்வலர்கள் என்று எங்களது நண்பர்கள் குழுவின் வட்டம் பெரிதாகி உள்ளது . எங்கள் குழு மூலம் ஆதரவற்றோருக்கு எங்களால் முடிந்த உதவி செய்து வருகிறோம் .



ABP நாடு செய்தி குழுமத்தின் மூலம் ராஜேஷை அடையாளம் கண்ட நாங்கள், அவருக்கு முதற்கட்ட உதவியாக 2000 ரூபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் , 1000  ரூபாய் பணமும்  அவருடைய ஊரை சார்ந்த ஞானப்பிரகாஷ் என்பவர் மூலம் ராஜேஷுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம் . மேலும் அவருக்கு கண் சிகிச்சை , மற்றும் அரசு வேலைக்கு மனு செய்தல் உள்ளிட்ட வேலைகளை , ஊரடங்கு முடித்தவுடன் செய்யலாம் என்று திட்டம் வகுத்துள்ளோம் . என்று தெரிவித்தார் .


மேலும்  இன்று விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ராஜேஷை  நேரில் சந்தித்த வி.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலர்  , அரசு மூலம் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவில் செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நம்மை தொடர்பு கொண்ட ராஜேஷ் , ABP நாடு செய்தி குழுமத்திற்கும்,  கைன்ட்னெஸ் கிட்டி அமைப்புக்கும்  தனது நன்றிகளை  தெரிவித்து கொண்டார் .