கொரோனாவிற்கு ஒரே தீர்வு என்று சொல்லப்படும் தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் சமீபத்தில் பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. தடுப்பூசி என்பது நம்மை பாதுகாக்க மட்டுமே தவிர பயமுறுத்துவதற்கு அல்ல. இருப்பினும் சமீப கால நிகழ்வுகளோடு தடுப்பூசியை ஒப்பிட்டு பரப்பப்பட்ட வதந்திகளின் காரணமாக பொதுமக்கள் ஒருவிதமான பீதியில் உள்ளனர். இந்த நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து சமூக மருத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது கருத்துப்படி தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஏற்படும் தயக்கத்திற்கு மத்திய ,மாநில அரசுகளே காரணம் என கடுமையாக குற்றம்சாட்டுகிறார் ரவீந்திரநாத். இதே அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறை பட்டியல்:




1. தடுப்பூசிகளின் கிளினிக்கல் ஆய்வு முடிவுகளை வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்காமல் அவசர அவசரமாக பயன்படுத்த முனைந்தமை.


2.தடுப்பூசிகளால் மிக,மிக அரிதினும் அரிதாக ஏற்படும் தீவிர பக்க விளைவுகள் குறித்து வெளிப்படையாக கூறாமை.


3. அறிவியல் ரீதியாக நிரூபணமாகாத ,போலி மருத்துவ அறிவியல் மருந்துகளை ,கொரோனா வராமல் தடுக்கும் என அரசியல் உள்நோக்கத்தோடு ஊக்கப்படுத்தியமை.


4. கோமியம்,பசுமாட்டுச் சாணம் போன்றவை கொரோனாத் தொற்று வராமல் தடுக்கும் என்ற மூடநம்பிக்கையை பரப்பியமை.


5. நீராவியை சுவாசித்தால் கொரோனா வராது,கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்ற தவறான கருத்தை  அமைச்சர்களே பரப்பியமை போன்ற...


அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகளை உருவாக்கியுள்ளன.  தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் , நீராவியை சுவாசித்தல் போன்ற வேறு முறைகளில் கொரோனா வராமல் தடுத்துக் கொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை ( false hope) கொடுத்துள்ளது. இனிமேலாவது மத்திய மாநில அரசுகள் அறிவியல் அடிப்படையில் செயல்பட வேண்டும். சிறப்பாக செயல்படுகிறோம் என காட்டிக் கொள்ள மலிவான, அறிவியலுக்கு எதிரான பரப்புரைகளிலும், செயல்பாடுகளிலும் ஈடுபடுவது சரியல்ல. மாயா ஜாலங்கள் மூலம் அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகள் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியாது.




அறிவியலை உயர்த்திப் பிடிப்போம். தடுப்பூசிகள் குறித்த சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், எனக்கூறியுள்ளார் டாக்டர் ரவீந்திரநாத். சமீபமாக கொரோனாவிற்கு ஆவி பிடித்தால் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. பலர் அதை கடைபிடித்தும் வருகின்றனர். ஆவி பிடித்தல் கொரோனாவை குணமாக்காது, சுவாசப்பாதைக்க பலனளிக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது டாக்டர் ரவீந்திரநாத் அரசு இயந்திரத்தை நோக்கி அடிக்கியுள்ள குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று பல டாக்டர்களும் வலியுறுத்துகின்றனர். 


மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்த வைப்பதில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், அது தொடர்பாக மக்களுக்கு இருக்கும் சந்தேகத்தை முற்றிலும் அகற்ற வேணடும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.