மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்த திருப்பூர் துரைசாமி சொன்ன காரணம் பொய்யானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மதிமுக-வில் இருந்து விலகிய திருப்பூர் துரைசாமி:


தி.மு.க.,வுடன் கட்சியை இணைக்க வலியுறுத்தி வைகோவிடமிருந்து எந்த பதிலும் வராத அதிருப்தியில், மதிமுக அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்தார்.


இவர் கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதியன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றில் கட்சியை திமுகவுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி எழுதியிருந்தார். அதில், "மதிமுகவை தொடங்கியபோது வாரிசு அரசியலுக்கு எதிரான வைகோவின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர். ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது.


இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க அவரது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது" என குறிப்பிட்டு வைகோ மற்றும் கட்சி செயல்பாடுகளை விமர்சித்திருந்தார்.


வைகோ விளக்கம்:


திருப்பூர் துரைசாமி கட்சியில் இருந்து விலகியதற்கு அவர் சொன்ன காரணம் உள்ளிட்டவைகள் குறித்து சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.


இது குறித்து பேசுகையில்,” திமுக-வுடன் கூட்டணி அமைப்பதை துரைசாமி விரும்பவில்லை. தி.மு.க. உடன் கூட்டணி அமைக்கக் கூடாது என துரைசாமி கூறினார். அன்று திமுக-வை எதிர்த்த திருப்பூர் துரைசாமி இன்று திமுகவில் மதிமுகவை இணைக்கக் கூறுகிறார்.தேர்தலின்போது திமுகவின் வெற்றிக்கு எதிராக திருப்பூர் துரைசாமி செயல்பட்டார். கட்சியில் ஆலோசனை கூட்டம் ஒன்றில், ’திமுக, வெற்றி பெறாது.’ என்று கூட்டத்திலேயே துரைசாமி பேசினார்; இன்றைக்கு தலைகீழாக மாற்றி, நேரெதிராக சொல்கிறார்.” எனத் தெரிவித்தார்.




மேலும் வாசிக்க..


பொன்னமராவதி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது.. வந்திதா பாண்டேவை பாராட்டிய டிஜிபி சைலேந்திர பாபு..!


Wrestlers Protest: சோகத்துடன் கங்கை கரையில் மல்யுத்த வீரர்கள்.. வீசப்பட இருக்கும் பதக்கங்கள்..!