விழுப்புரம்: தமிழகத்தில் உள்ள சமய அறநிலையத் துறையில் சார்பில் கோவில்களில் பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டு ஆன்மீக அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக மயிலம் பொம்மபுர ஆதீனம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் பல்லக்கு உற்சவம் தொடர்ந்து நடத்தலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மயிலம் பொம்மபுர ஆதீனம் மயிலம் சுப்பிரமணியர் கோயில் சன்னதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-


தமிழகத்தில் ஒரு வார காலமாக ஆன்மீக சம்மதமாக பேசப்பட்டு வரும் செய்தி மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு உற்சவம் தடை பற்றி பேசப்பட்டு வருகிறது, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் அந்த பல்லக்கு உற்சவதிற்கு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து ஆதினகள் சார்பில் தமிழக அரசை அணுகி காலம் காலமாக நடைபெறுகின்ற பல்லக்கு உற்சவத்தை மீண்டும் நடத்துவதற்கு தமிழக அறநிலையத் துறைஅமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தோம், இதனையடுத்து இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தார்.




இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மீண்டும் பல்லக்கு உற்சவத்தை நடத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது பொது மக்களுக்கும் ஆதினங்கள் ஆகிய எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது, எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் அதை எப்படி செய்வது என்பது குறித்து முறையான ஆலோசனைகள் மேற்கொண்டு அந்த பிரச்சனையை சரி செய்கிறார்கள், உலகத்திலேயே தமிழகத்தில் தான் சமய நிறுவனங்கள், திருக்கோவில்கள், திருமடங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை அதிகம் உள்ளது.


மேலும் தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் பல திருக்கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழாவினை செய்து வைத்துள்ளனர், மேலும் மேலும் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடனும் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதற்காக ஆதினங்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவது சம்பந்தமாக உரிய ஆவணங்களுடன் வட்டாட்சியர் ஆகியோர் ஒருங்கிணைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு ஆன்மீக அரசாக செயல்பட்டு வருகிறதாக மயிலம் பொம்மபுர ஆதீனம் தெரிவித்தார்.


தமிழக அரசு அடி பணிந்து விட்டது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்து மிகவும் தவறானது எனவும் பல்லக்கு உற்சவம் என்பது ஆதினத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதினத்தின் அன்பர்களால் நடத்தப்படும் நிகழ்ச்சி ஆகும். இதற்கு யாராலும் தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.