பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வியாளர் தேவநேயன் அரசு கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் மாணவர்கள் செய்யும் சேட்டைகள் நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. தொடர்ந்து மாணவர்கள் சேர்ந்து ஆசிரியர்களை தாக்குவதும், கிண்டல் செய்வதும், வகுப்பறையில் மாணவிக்கு மாணவர் தாலி கட்டுவதும், இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் செய்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவியது. 


இதைப்பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வருங்கால மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். 


இந்தநிலையில், இன்று சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ”ஒழுக்கக்கேடாக நடந்துகொள்ளும் மாணவர்களின் சான்றிதழில், ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள்” என பதிவிடப்படும் என்றார். மேலும், பள்ளி வகுப்புகளில் கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், வகுப்பறையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நிரந்தரமாக பள்ளியிலிருந்து  நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 


இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு தவறானது என்று கல்வியாளர் தேவநேயன் அரசு தனது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”தவறான அறிவிப்பு இது.மாணவர்கள் தவறு செய்தால் அதை சரி செய்வது தான் சரி. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல,இதனால் குழந்தைகள் இடைவிலகல் ஆவார்கள், இப்படி விலகலான குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் விளிம்பு நிலை குழந்தைகளே.


மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள் அவர்கள் மீது என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?. அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும்.


 

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121 , 2012 படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும் மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். எனவே குழந்தைகளின் சிறந்த நலன் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டுகிறேன். நன்றி” என்று தெரிவித்துள்ளார். 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண