இந்தியாவில் பெகாசஸ்' ஸ்பைவேர் செயலி மூலம் வேவுபார்க்கப்பட்ட 300 நபர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில், மே 17 அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் இடம்பெற்றுள்ளார். 


 






 


தமிழீழ இனப்படுகொலை, ஸ்டர்லைட் ஆலை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போன்ற பல்வேறு போராட்டங்களை மே 17 இயக்கம் முன்னெடுத்து நடத்தியது. கடந்த 2018ம் ஆண்டு, சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் திருமுருகன் காந்தி  கைது செய்யப்பட்டு 53 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்படத்தக்கது. 2019ல் இருந்து பெகசஸ் ஸ்பைவேர் மே 17 திருமுருகன் காந்தியை உளவு பார்க்கத் தொடங்கியிருக்கிறது.



ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூஸ் 18, தி வயர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் உட்பட 40  இதழ்களின் பத்திரிக்கையாளர்களின் சாதனங்களில் இந்த ஸ்பைவேர் இருப்பதாக ஃபாரன்சிக் டீம் தெரிவித்தது. இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய 'பெகாசஸ்' ஸ்பைவேர் செயலி உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகாசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் ஊடுருவி பயனர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும்.


பத்திரிக்கையாளர்களைத் தாண்டி, சமூக செயர்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்,  நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதி (பெயர் வெளியிடப்படவில்லை) , இந்நாள் மற்றும் முன்னாள்  உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உளவுபப் பார்க்கப்பட்டுள்ளனர்.     


பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள்/உறவினர்கள் தொலைபேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ளது.