புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார் அதில் புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்பட்டுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தந்த பகுதி கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் குற்றப்பிரிவு போலீசார் வீராம்பட்டினம் சுடுகாடு பகுதியில் இன்று காலை ரோந்து சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர் அப்போது அவர்கள் புதுச்சேரியில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ரிஷி என்கிற ரவிகுமார் (20) மற்றும் கவி (18) என்பதும், இவர்கள் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சிலர்க்கு கஞ்சா விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.





இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, 2 செல்போன்கள், 2 ஆயிரத்தி 500 ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர், மேலும் அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து  கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்று கண்காணித்து வந்த போலீசார் அவ்விடத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.


முதற்கட்ட விசாரணையில் அவன் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் @ வாழக்காய் (18) என்றும் அவன் கல்லூரி மாணவர்களுக்கு  விற்பனை செய்வதற்காக தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது,  இதனை தொடர்ந்து  அவன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவனை கைது செய்தனர்.




மேலும் தொடர்ந்து தமிழகம் மற்றும் ஆந்திரா  பகுதிகளிலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா வருவதை தடுக்க போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுத்தப்பட்டுள்ளனர் என கிழக்கு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.




காவல்துறையினர் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால், எவ்வளவு பெரிய உயர் பொறுப்புகளில் இருந்தாலும் அவர்கள் மீது 100 சதவீதம் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.