கடந்த சில மாதங்களாகவே, வட மாநிலத்தவர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. மனித நாகரிகத்தின் அடிப்படையே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்வது தான். பண்டைய காலத்தில், மக்கள் தங்களின் இடத்தை விடுத்து உணவை தேடி ஆறுகளை சுற்றியுள்ள இடங்களில் குடிபெயர்ந்தனர்.
அதிக அளவில் குடியேறும் தமிழர்கள்:
அதன் தொடர்ச்சியாக, தற்போது, வேலைகளை தேடி மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள், உலகம் முழுவதும் குடிபெயர்ந்துள்ளனர். குறிப்பாக, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிக அளவில் குடியேறியுள்ளனர். நாடு விட்டு நாடு குடியேறுவது மட்டும் இன்றி, மாநிலம் விட்டு மாநிலமும் குடிபெயர்ந்துள்ளனர்.
பெங்களுரூ ஐடி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகின்றனர். கேரள மாநிலத்தவரை பொறுத்தவரையில், அரபு நாடுகளில் அதிக அளவில் குடிபெயர்ந்துள்ளனர்.
உண்மையை சொல்லப்போனால், அமெரிக்காவே குடியேறிய மக்களால் ஆன நாடு. ஆப்பிரிக்கர்கள், ஆசியர்கள் அதிக அளவில் அங்கு வசித்து வருகின்றனர். நிலைமை இப்படியிருக்க, சமீப காலமாகவே, குடியேறும் மக்கள் மீது மோசமான வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், குடியேறிகள் குறித்து மோசமான வன்முறையை தூண்டும் விதமான கருத்துகளை கூறியிருக்கிறார். வலதுசாரி பழமைவாதிகள், இம்மாதிரியாக தொடர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
வெறுப்பு பிரச்சாரம்:
அந்த வகையில், தமிழ்நாட்டில் சமீப காலமாக வட மாநிலத்தவர் குறித்து பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம் சமூகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. வட மாநிலத்தவர் குறித்து பிரபல யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து, வெறுப்பு பேச்சுகள் மீண்டும் பிரச்னையை கிளப்ப தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் வட மாநிலத்தவர் எடுத்து கொள்வதாக கருத்து பரப்பப்பட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், வட மாநிலத்தவர் பெரும்பாலும் கூலி தொழில் வேலைகளையே செய்கின்றனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் படித்த பட்டதாரிகளாக இருப்பதால், அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்கின்றனர்.
ஆனால், வட மாநிலங்களை பொறுத்தவரையில், மிகவும் பின்தங்கிய கல்வி கற்காக மக்கள், தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருகின்றனர்.
இங்கு, உணவகங்களிலும் கட்டுமான கூலி தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர். ஆனால், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், வட மாநிலத்தவர் குறித்து உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி வருகிறது.
ரயிலில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல்:
அதன் எதிரொலி, தமிழ்நாட்டில் ரயில் ஒன்றில் வட மாநிலத்தவரை தமிழர் ஒருவர் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தாக்குவது மட்டும் இன்றி மோசமான கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு ரயில்வே காவலுதுறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட சட்ட பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் குறித்து தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என தமிழ்நாடு ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.