கரூரில் தனியார் பள்ளி உரிமையாளரிடம் வருமான வரித்துறை அதிகாரி என கூறி ஆவணங்களில் பிழை இருப்பதாக கூறி ரூபாய் 15,000 கேட்டு ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.




கரூர் அடுத்த காக்காவாடி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் உரிமையாளர் ரகுபதி (வயது 53). இவர் கரூர் நகரப் பகுதியில் வசித்து வருகிறார். இவரது பள்ளிக்குச் சென்ற மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கற்பகம் காலனி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 73) என்பவர் வருமான வரித்துறை அதிகாரி என கூறி பள்ளியின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் ஆவணங்களை சரிபார்த்து அதில் சில தவறுகள் இருப்பதாக கூறி அதை சரி செய்ய ரூபாய் 15 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கேட்டு ரகுபதியை ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ரகுபதி வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சந்திரசேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.




லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது


கடவூர் தாலுகாவில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதைஅடுத்து பாலவிடுதி போலீசார் கடவூர் கடைவீதி பகுதியில் சோதனை செய்தனர். அப்போது  கடவூர் சேர்ந்த சரவணன் வயது 52 என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 37 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.





மது விற்ற 9 பேர் கைது


கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா எஸ்ஐ அலகுராம் சட்டம் ஒழுங்கு போலீஸ் எஸ்ஐ மதியழகன் உள்ளிட்ட போலீசார் மாயனூர் சிந்தாமணி பட்டி, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக திருநாதன் 33, பழனிச்சாமி 45, சின்னப்பொண்ணு 49, மாயனூர் கிருஷ்ணன் 32, கருப்பத்தால் 50, மணிமேகலை 33, ரங்கராஜ் 52, மாணிக்கம் 55, முத்து 52 ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 275 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.