புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையில் இலவச வைஃபை வசதியை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது..
மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நகரத்திற்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் ரூ.500 கோடி நிதி வழங்கப்படும். இதைப்போன்று மாநில அரசு ரூ.500 கோடி நிதி வழங்க வேண்டும். இவை இரண்டும் சேர்த்து ஆயிரம் கோடிக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தத் திட்டத்தின் படி நகரின் ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் பகுதியாக மாற்றுதல், நகரில் பொதுமக்கள் தொடர்புடைய பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர்த்து நடைபாதைகள் அமைத்தல், இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த 2015ம் அண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை துவக்கி வைத்தது. மாநகர்வாழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை நிலையான, சுகாதாரமான சுற்றுச்சூழலுடன் இதற்கான பயன்பாட்டுச் செயல் வடிவில் (ஸ்மார்ட் சொல்யூஷன்ஸ்) வழங்கிடுவதே இத்திட்டத்தின் நோக்கம். தங்கள் அன்றாட வாழ்வில் மனதுக்கு உகந்த ஏற்புடைய வாழ்க்கைச் சூழலில் மக்கள் வாழ்ந்திட இது வகை செய்கிறது.
சீர்மிகு (ஸ்மார்ட்) நகரத்திட்டப்பணியின் கீழ் 100 நகரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, கோயம்புத்தூர்,மதுரை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு அங்கமாக மெரினா கடற்கரையில் இலவச wifi நிறுவுவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் அளித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், சென்னை மெட்ரோ நகரில் 49 இடங்களில் 'ஸ்மார்ட் தூண்களை' நிறுவியுள்ளது! இந்த `ஸ்மார்ட் தூண்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிட இலவச வை-ஃபை வழங்கப்படுகிறது! சென்னை மாநகராட்சியின் மண்டலம் #15 தவிர, மற்ற அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி உள்ளது.
இதுதவிர சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இலவச வை-ஃபை வசதி செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. இந்த முயற்சி தொடர்பாக தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடனும் விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. விரிவான ஆலோசனை கூட்டத்தின் முடிவில், 2 தனியார் நிறுவனங்கள் இந்த இலவச Wi-Fi சேவையை மெரினா கடற்கரையில் வழங்க உள்ளன, இது பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், மெரினா கடற்கரையில் இலவச வை-ஃபை வசதியை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.