சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,

   நிவாரணப் பொருட்களை வழங்க கூடிய வாகனங்களை  அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் கொடியசைத்து  அனுப்பிவைத்தார். பொன்னேரி, திருவெற்றியூர், ஆர்.கே நகர், வில்லிவாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது.


அரிசி, ரவா, கோதுமை, பால்பவுடர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனைத்தவிர வேளச்சேரியில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட உள்ளது.


இதனை தொர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன், “ கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்காக செய்திருந்த வேலையை தற்போது கேமரா முன் செய்கிறோம். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.


நாம் எதிர்பார்த்த அளவை விட அதிக அளவு பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது பேரிடர் பாதிப்பு என்பது எந்த சந்தேகமும் இல்லை, இது நாம் யாரையும் குறை சொல்ல வேண்டிய நேரம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டிய நேரம்.வேலை மட்டும் கிடையாது இது ஒவ்வொருவரின் கடமை.


கொரோனா காலங்களில் இந்த அலுவலகத்தை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான படுக்கையறையாக அறிவித்தேன், ஆனால் இந்த இடம் தொற்றுநோய் பாதித்த இடம் என்று அனுமதிக்கப்படவில்லை. இந்த மாதிரியான இடையூறுகள் எல்லாம் எனக்கு புதிதல்ல.


இயற்கை பேரிடர் பாதிப்பு  என்பதால் நாம் யாரும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இந்த முறை மழை பதிவாகி உள்ளது. அவற்றை திமுக ஆட்சியை குறை சொல்லுவதோ, அதிமுக ஆட்சியை குறை சொல்லுவதோ, விட்டு விட்டு அனைவரும் மக்களுக்காக இறங்கி வேலை செய்ய வேண்டும்.


மேலும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட 5000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு இயல்பு நிலை திரும்பும் வரை உணவு வழங்கப்படும்.


இந்த மழை வெள்ளம்  பாதிப்பு குறித்து ஊடகவியலாளர்கள் களத்தில் இருந்து சிறப்பாக பணியாற்றுவீர்கள் செய்தி செய்தியாக இருந்தது பதற்றத்தை  உருவாக்கவில்லை. எனவே ஊடகத்திற்கு எனது பாராட்டுக்கள்.


மேலும் தேவைப்படும் இடங்களுக்கு மருத்துவ முகாமையும் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தொடங்கியுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.