மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே டிசம்பர் 5 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலானது தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றது. கிட்டதட்ட 24 மணி நேரம் இடைவிடாது சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடைந்தனர். 


குறிப்பாக சென்னை மழைநீரில் மிதந்தது என்றே சொல்லலாம். முன்னெச்சரிக்கையாக மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என அனைத்திற்கும் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. மழை நின்றதும் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 


இன்னும் சில இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால் தொடர்ந்து 5வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் நேற்று முன்தினம் முதல் அலுவலகங்கள்,போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நலன் கருதி விடுமுறை தினமான இன்று ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் சார்பில் தமிழ்நாட்டில் கிட்டதட்ட 35 ஆயிரத்துக்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக கடை திறந்திருக்கும் நாட்களில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் குறிப்பிட்ட கடைகள் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்கள் பிரிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டு வந்தது. அந்த வகையில் விடுமுறை தினமான இன்று ரேஷன் கடைகள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்  ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுகிறது.




மேலும் படிக்க: BiggBoss 7 Tamil: பரபரப்பில் பிக்பாஸ் வீடு! மற்றவர்களை ட்ரிக்கர் செய்கிறாரா அர்ச்சனா? பயங்கர கேம் பிளானா இருக்கேப்பா!