நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் நாளைமுதல் புகாரளிக்கலாம் என்றும், சட்டரீதியாக புகாரளிக்க பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement


பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை புதுநத்தம் ஆயதப்படை மைதானத்தில் நாளை முதல் புகாரளிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மோசடி வழக்கு:


 நியோமேக்ஸ் நிதி நிறுவமனம் பல கோடி மோசடி செய்ததாக தொடர்ந்து புகாரெழுந்தது. இதையடுத்து, புகாரின் பெயரில் நியோமேக்ஸ் நிதி நிறுவன பங்குதாரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். 


மதுரையை தலைமையிடமாக கொண்டு ‘நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பிரபல நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பல கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர். 


விசாரணையில் நியோமேக்ஸ் நிறுவனம் திருநெல்வேலியை அடுத்த பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை பைபாஸ், திருச்சி, தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கிளைகள் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும், முதலீடு செய்யும் பணமானது 2 முதல் 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதைகேட்டு பொதுமக்கள் பலரும் தங்களது பணத்தை முதலீடாக செய்துள்ளனர். 


இதன் தொடர்ச்சியாக நியோமேக்ஸ் சொன்னபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளது. இதையடுத்து மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள நிலையில், 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். 


இதுதொடர்பான வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாளைமுதல் மதுரை புதுநத்தம் ஆயதப்படை மைதானத்தில் புகாரளிக்கலாம் என மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.