ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் பெண்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் (kanchipuram News): தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களாக மக்களால் கொண்டாடப்படுவது ஆடி மாதம் ஆகும். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதமான ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம் . அந்தவகையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை ( aadi velli 2023 ) ஒட்டி கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் காலை முதலே பெண்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தவும் அம்மனை தரிசித்து செல்லவும் வந்தனர்.
காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஸ்ரீ தும்பவனத்து அம்மன் திருக்கோயில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பொருட்கள் பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு பல வண்ண மலர்கள் சூடி படையல் இட்டு அம்மனுக்கு சிறப்பு தீபா ஆராதனை நடைபெற்றது. முதல் வெள்ளிக்கிழமை நிகழ்வை காஞ்சி ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார்.
காலை முதலே திருக்கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் பொங்கல் இட்டு அம்மன் சன்னதி அருகே வைத்து நெய் தீபம் ஏற்றி தங்கள் குலம் செழிக்க வாழ்த்தி அருள வேண்டும் என வேண்டுதல் நிறைவேற்றினர். இது மட்டும் இல்லாமல் சாமி தரிசன மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது மாவிளக்குடன் அம்மனை தீப ஆராதனை செய்து வழிபட்டனர்.
செல்வ, செழிப்பு:
ஆடி மாதம் என்றாலே கோயில்களில் களை கட்டுவது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். குறிப்பாக, ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி வெள்ளிக்கிழமை தினத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி மாதத்தின் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4வது வாரம் காய் அலங்காரமும், 5வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள். அந்த தினங்களில் அம்மனை நேரில் சென்று வழிபட்டால் பக்தர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிட்டும். குடும்ப இன்னல்கள், சிரமங்கள் நீங்கி செல்வ, செழிப்புடன் ஆரோக்கியமாக வாழலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமை கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று நன்மைகளை பெறுங்கள். உடல்நலக்குறைவு உள்ள பெண்கள், பக்தர்கள் கட்டாயம் விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. கோயில் வழிபாட்டில் பங்கேற்றால் மட்டும் போதும்.