சேலத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தீயை அணைக்கும் பணி துரிதமாக நடைபெற்றி வருகிறது.


மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி சேலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ள நிலையில் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


முதல் தளத்தில் ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அங்கு புகைமூட்டம் எழுந்த நிலையில் உள்ளே இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.அதேபோல் விபத்து நடந்த பொது மற்றும் அவசர சிகிச்சை பிரிவு முதல் தளத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்த காரணம் பற்றி கேட்டறிந்தார்.