மாநகராட்சி ஒத்துழைப்பு இல்லாததால் இந்து அறநிலையத்துறை பணியாளர்கள் சிரமத்துடன் மீன்களை அகற்றும் பணியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது.


மதுரை தெப்பக்குளம்:


மதுரையின் முக்கிய சுற்றுலாதளமாக உள்ள வண்டியூர் மாரியம்மன தெப்பக்குளம் சுமார்16 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் தெப்பக்குளத்தை சுற்றிலும் பள்ளி, கல்லூரி, கோவில்கள் , மண்டபங்கள் உள்ளதால் தெப்பக்குளத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் கடந்துசெல்கின்றனர்.


இதே போன்று காலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதால் இதில் மீன்கள் குத்தகைக்கு விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதில் நாள்தோறும் 400கிலோவிற்கு மேல் மீன்கள் பிடித்து குத்தகைதாரர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 




ரசாயனம் கலப்பு:


இந்த தெப்பக்குளத்திற்கு மதுரை வைகைஆற்றில் உள்ள யானைக்கல் தரைப்பால தடுப்பணையிலிருந்து பனையூர் கால்வாய் வழியாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கடந்த 5 ஆண்டுகளாக வாய்க்கால் மூலமாக நீரானது கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தெப்பக்குளத்தில் நீரின் அளவு குறைந்துவந்தது.


இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் தெப்பக்குளத்திற்கு நீரானது யானைக்கல் தடுப்பணை பகுதியில் உள்ள பனையூர் கால்வாய் மூலமாக  செல்கிறது. வைகை ஆற்றில் பல மாதங்களாக தேங்கியிருந்து ஆகாயதாமரை செடிகளை அகற்றியபோது அதில் ரசாயனம் கலந்தது போன்ற தன்மையிலான நீரும், வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவுநீரும் சேர்ந்து தெப்பக்குளத்தில்  நீரோடு சென்றது.




2 டன் மீன்கள்:


இந்நிலையில் தற்போது கழிவுநீரோடு கலந்த நீரானது தெப்பக்குளத்தில் நிரம்பியதால் வளரக்கூடிய மீன்கள் தெப்பக்குளம் முழுவதிலும் செத்து மிதந்துவருகிறது. சுமார் 2 டன் அளவுள்ள 5 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான மீன்கள் தொடங்கி மீன் குஞ்சுகள் வரை தெப்பக்குளம் முழுவதும் செத்து மிதக்கிறது. இதோடு சேர்ந்து தெப்பக்குளத்தை சுற்றிலும் மாலை நேரங்களில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகள் வீணாண உணவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் பாசிகள் படிந்து தெப்பக்குளம் முழுவதும் சுகாதாரமற்ற குளமாக மாறியுள்ளது.


நேற்றே மீன்கள் செத்து மிதந்த நிலையில் அது அகற்றப்பட்ட நிலையில் நேற்று 2-வது நாளாகவும் பல டன் கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் அவலம் நீடித்துவருகிறது. மதுரை மாநகராட்சி நிர்வாகமும் , கோவில் நிர்வாகமும் தெப்பக்குளத்தை சுற்றி  செயல்படும் சாலையோர கடைகளுக்கான கட்டணம் தொடங்கி வாகன நிறுத்த கட்டணம் என பல்வேறு வசூலில் ஈடுபட்டுவரும் நிலையில் தெப்பக்குளத்தை முறையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் தெப்பக்குளத்தில் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.




துர்நாற்றம்:


மதுரையின் தொல்லியல் அடையாளமாக தொன்மை வாய்ந்த மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீன்கள்  2 நாட்களாக செத்து மிதப்பதால் அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் கடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துகொண்டு நடந்துசெல்லும் நிலை உருவாகியுள்ளது. தெப்பக்குளத்தின் கரையில் உள்ள  முக்தீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், கால பைரவர் வரும் பக்தர்களுக்கு மாணவர்களுக்கு ஒவ்வாமை  ஏற்பட்டு வாந்தி எடுக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.


கடந்த 2 நாட்களாக திடீரென மீன்கள் செத்து மிதக்கும் நிலையில் இதற்கான காரணம் குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சி சுகாதாரத்துறையும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக கோவில் நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்கள் செத்து மிதக்கும் மீன்களை மூட்டை மூட்டையாக கடும் துர்நாற்றத்துடன் ரப்பர் படகுகள் உதவியுடன் அகற்றினர்.




சுகாதார சீர்கேடு:


அப்போது மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலையில் கோவில் சார்பில் மீன்களை அகற்றிய பணியாளர்கள் வேறு வழியின்றி அகற்றப்பட்ட டன் கணக்கான மீன்களை மூட்டை மூட்டையாக கட்டி தெப்பக்குளத்தில் பள்ளி ஒன்றின் அருகிலயே இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியிலயே கொட்டிசென்றனர். மதுரையின் அடையாளங்குள் ஒன்றான வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் இது போன்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் அச்சமடையும் வகையில் உள்ளது குறித்து சுகாதாரத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய ஆய்வுகளை மேற்கொள்வதோடு, மாநகராட்சி தெப்பக்குளத்தின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.





மதுரை ஆளும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் இது போன்று அவலமா? என பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ள நிலையில் இது போன்ற சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது