மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழி ஏற்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவ இயக்குனரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், கல்லூரி முதல்வர் ரத்னவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அப்போது முதலாமாண்டு மாணவர்கள் தங்களது  சீருடையை அணிந்தபின் வழக்கமான ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ' சமஸ்கிருத உறுதிமொழியான 'மகரிஷி சரக் ஷபத்' உறுதிமொழியை மற்ற மாணவர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


உறுதிமொழி ஏற்பு நடைபெற்றபோதே அதனை படித்துக்கொண்டிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரிடம் உறுதிமொழி ஏற்பு குறித்து சந்தேகத்தை எழுப்பினார். 


பின்னர் மேடையில் பேசிய அமைச்சர், புதிய உறுதிமொழி ஏற்கபட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவர்கள் ஹிப்போகிரட்டிக் சத்தியப்பிரமாணத்தை மட்டுமே செய்யும் நிலையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ' சமஸ்கிருத உறுதிமொழியான 'மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி ஏன் ஏற்கப்பட்டது என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


அந்த உறுதிமொழியின் ஒரு வரியில், குறிப்பாக ஒரு ஆண் மருத்துவராக ஒரு பெண் நோயாளிக்கு அவளது கணவர் அல்லது பிற நெருங்கிய உறவினர் இல்லாமல் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்பது போன்ற வாசகங்கள்  இடம்பெற்றது. 


இந்த வாசகங்கள் முற்போக்குதனமானது எனவும், மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக உள்ளது என பல்வேறு மருத்துவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவகல்லூரி நிர்வாகம் உறுதிமொழி ஏற்பு குறித்து மாணவர் செயலாளர்  ஒருவர் இது போன்று உறுதிமொழியை எடுத்து வாசித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்


இந்நிலையில் மதுரை அரசு மருத்துவகல்லூரியில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் மருத்துவகல்லூரி முதல்வருக்கு விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.