பல்வேறு வசதிகளை மட்டும் அனுபவித்து வரும் நம் தலைமுறையினர் காலப்போக்கில் அந்த வசதிகளும், வாய்ப்புகள் வந்த வலிகளையும், போராட்டங்களையும் மறந்து விடுகிறோம் என்பதே வேதனையான நிதர்சனம். அவ்வாறு நாம் மறந்த ஒன்றுதான் மே 1.


இன்றைய தலைமுறையினர் பலருக்கும் மே 1 என்றால் அது ஒரு விடுமுறை தினம். உழைப்பாளர் தினத்திற்காக விடப்படும் விடுமுறை. ஆனால், அதன் வரலாறு அத்தனை வலிகள் நிறைந்தது. 19ம் நூற்றாண்டு காலத்தில் மனித உழைப்பே பிரதானம். அந்த காலகட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் ஒவ்வொன்றும் ஒன்றை, ஒன்றை அதிகாரத்திலும், வளர்ச்சியிலும் வீழ்த்த துடித்துக் கொண்டிருந்தன. இதற்கு மிகப்பெரிய பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டவர்கள் தொழிலாளர்கள்.




தொழிலாளர்கள் எந்தவொரு வரையறையும் இன்றி முதலாளிகள் மற்றும் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக சக்கையாக பிழியப்பட்டனர். தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கோ, அவர்களின் நலனுக்கோ எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது. தினசரி 18 மணி முதல் 20 மணி நேரம் தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனால், அவர்களின் ஊதியம் என்பது மிக மிக குறைவு.


1806ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே தொழிலாளர்களின் கஷ்டங்கள் உலகில் அனைவரது பார்வைக்கு பட்டது. பிலடெல்பியா நகரத்தில் இயந்திர தொழிலாளர்கள் ஆரம்பித்த சங்கம்தான் உலகின் முதல் தொழிலாளர்கள் சங்கம் ஆகும்.


தொடர்ந்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமெரிக்காவில் முதன் முதலாக தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கினர். வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களின் முதல் கோரிக்கை உழைப்பிற்கேற்ற ஊதியம் பெற வேண்டும் என்பதற்காக அதிக ஊதியம் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், தாங்கள் பணியாற்றும் நேரத்தை குறைப்பதன் மூலமே தங்கள் உழைப்பு சுரண்டப்படுவதை தடுக்க முடியும் என்று போகப்போக தொழிலாளர்கள் உணர்ந்தனர்.




1820, 1830 காலகட்டங்களில் தினசரி 10 மணி நேர வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதலாளி வர்க்கத்திடம் தொழிலாளர்கள் போராடினர். அமெரிக்காவில் இதையடுத்து அரசாங்க ஊழியர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக குறைக்கப்பட்டது. ஆனால், இதனால் சாமானிய தொழிலாளர்களுக்கு எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை. அனைவருக்கும் 10 மணிநேர என்ற தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.


அந்த தருணத்தில் காரல்மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் உழைப்பால் உருவான கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையான உழைப்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, மார்க்சின் வார்த்தைகளான, “ உலகம் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை.  பெறுவதற்கோ பொன்னான ஒரு உலகம் காத்திருக்கிறது” என்ற வாக்கியம் தொழிலாளர்கள் மத்தியில் புதிய புத்துணர்ச்சியை அளித்தது. 1850 காலகட்டத்தில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் உருவாகியிருந்தது.




இந்த தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தல்களால் 10 மணி நேர வேலை என்பதை 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையாக வலியுறுத்தினர். ஆஸ்திரேலியாவின் கட்டிடத் தொழிலாளர்கள் “ 8 மணி நேர வேலை..! 8 மணி நேர பொழுதுபோக்கு..! 8 மணி நேர ஓய்வு” என்று துல்லியமாக வரையறுத்து போராடினர். அவர்களது போராட்டத்திற்கு அந்த நாட்டு முதலாளி வர்க்கம் அடிபணிந்தது. அவர்களின் வெற்றி மற்ற நாட்டு தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை அளித்தது.


1866ம் ஆண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒருங்கிணைந்த சங்கமாக தேசிய தொழிலாளர் சங்கம் உருவாகியது. அந்தாண்டு பால்டிமரில் நடைபெற்ற சங்கத்தின் மாநாட்டில் 8 மணி நேர வேலையை முன்மொழிந்து தீர்மானம் நிறைவேற்றினர். லண்டனில் பர்ஸ்ட் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொழிலாளர்கள் சங்கம் 8 மணி நேர வேலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. 1810-களில் தொடங்கிய அவர்களின் போராட்டங்கள் நீண்ட காலமாகியும் வெற்றி கிட்டாததால் வேலை நிறுத்தம் என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்தனர்.





1886ம் ஆண்டு மே 1-ந் தேதி தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் மீதான வெறுப்பு நாடு முழுவதும் பரவியிருந்தது. உழைக்கும் மக்கள் அனைவரும் சிகாகோவில் திரண்டனர். அந்த நகரத்தில் எழுப்பப்பட்ட 8 மணி நேர வேலை என்ற கோஷம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் கோஷங்கள் முதலாளி வர்க்கத்திற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.


அரசும், முதலாளி வர்க்கமும் கைகோர்த்து வன்முறையை கட்டவிழ்த்தனர், தடியடி நடத்தினர். மே 4-ந் தேதி அரசின் வன்முறையை கண்டித்து ஹே மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடந்தது. மிகவும் அமைதியாக நடந்த கூட்டத்தில் மக்கள் திரளாக பங்கேற்று தலைவர்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கூட்டத்தில் யாரோ வீசிய குண்டு ராணுவ அதிகாரி உயிரை பறித்தது. உடனடியாக துப்பாக்கிச்சூட்டை தொடங்கிய காவல்துறை தொழிலாளர்களை நோக்கி சுட்டனர். இதில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.




1891ம் ஆண்டு மே 1ம் நாள் சிகாகோ போராட்டத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தும் விதமாக சர்வதேச உழைப்பாளர் தினமாக இரண்டாம் இன்டர்நேஷனல் தொழிற்சங்கம் பிரகடனம் செய்தது. அன்று முதல் இன்று வரை மே 1 சர்வதேச உழைப்பாளர் தினமாக பிரகடனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்தியாவில் முதன்முதலாக 1923ம் ஆண்டு மே 1 தினத்தை தொழிலாளர் தினமாக சிங்காரவேலர் என்ற நமது தமிழர் மெரினாவில் கொடியேற்றி கொண்டாடினர். வலிகள் நிறைந்த வரலாறு நிறைந்த உழைப்பாளர் தின நாளில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் அடிப்படை உரிமையும், அவரது உழைப்பின் பயனும் அவரது ஆயுட்காலம் வரை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண