கடலூர் அடுத்த வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பு படிக்கும் இருவேறு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்த ஆசிரியர்கள் தகராறை விலக்கிவிட்டு, மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு வந்து, பள்ளிக்கூடத்தில் தங்கள் பிள்ளைகளுடன் மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும், அதனால் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
அதன் பேரில் பள்ளிக்கூடம் முன்பு காலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவர்களின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை அறிந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் இன்று காலை 11 மணி அளவில் சுவர் ஏறி பள்ளிக்குள் புகுந்தனர். பின்னர் வகுப்பறைக்குள் புகுந்து 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மாணவர்கள் மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தாக்குதலில் 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றனர். இந்த நிலையில் மாணவர்கள் தாக்கப்பட்டதை பற்றி அறிந்த அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூடம் முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி சக மாணவ-மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து பள்ளிக்கூடம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளிக்கூடம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.