NIPER மசோதா முன்மொழியப் பட்ட கவுன்சிலில் எஸ்.சி, எஸ்.டி.க்கான இடம் நிராகரிக்கப்பட்டது அம்பேத்கரின் நினைவு நாளில் இழைக்கப்பட்ட அநீதி என சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் நேற்றைய தினம் சு.வெங்கடேசன் மக்களவையில் பேசிய வீடியோக்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


அதில், “NIPER தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சம்பந்தப்பட்ட இந்த மசோதாவில் முதலில் என்னுடைய அதிர்ச்சியை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இன்று மாமேதை அம்பேத்கரின் நினைவு நாள். நாடே அவருடைய பங்களிப்பை பொற்றிக்கொண்டிருக்கிற இந்நாளில் NIPER மசோதாவில் எஸ்.சி, எஸ்.டி கவுன்சிலுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கிறது. ஆனால் நிலைக்குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடத்தை இந்த மசோதா உறுதி படுத்தவில்லை என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படியென்றால் நாடாளுமன்ற நிலைக்குழு எதற்கு கூட்டப்படுகிறது. அவற்றின் கருத்துக்கு என்ன மரியாதை தரப்படுகிறது என்பதை இந்நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், எல்லா உயர்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்திலும் அறிவின் பெயரைச் சொல்லி, இட ஒதுக்கீட்டை மறுப்பதை இந்த அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. அதையே இந்த மசோதாவிலு செய்திருக்கிறது. 






சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல அடிதட்டு ஆய்வு மாணவர்களின் கல்வி உதவித்தொகை பற்றி பேச இந்த மசோதா மறுக்கிறது. இவையெல்லாம் ஒரு உயர்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக நீதியை உறுதிபடுத்துகிற நிலையில் இருந்து தவறுகிற செயல் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். இப்போது இருக்கும் ஒன்றிய அரசு பழம்பெருமையை மீண்டும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று சொல்வார்கள். 


பழம்பெருமை என்பது வேறு; மரபு என்பது வேறு .  பெருமை மக்கும். மரபு மக்காது. நம்முடைய சிந்தனை மரபு மிக முக்கியமானது. MakeInIndia மட்டுமல்ல Think in India மிக முக்கியமானது. தமிழ் மருத்துவ மரபை உயர்த்திப் பிடியுங்கள். தமிழ் மருத்துமான சித்த மருத்துவம் குறித்தும் அவற்றின் ஆய்வுகள் குறித்தும் நமது இந்திய மருத்துவத்தை வளர்ப்பதற்கான எந்த ஒரு ஏற்பாடும், வழிமுறையும் இந்த மசோதாவில் இல்லை. சித்த மருத்துவத்தைப்பற்றி சொன்னால், 8000 மூலிகைக்கு மேல், 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மகத்தான அறிவை விஞ்ஞான பூர்வமாக அறிவித்தவர்கள். உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் என்று உடலை மையப்படுத்தியே ஒரு தத்துவம். தாவரங்களிலே தொடங்கி, தாதுக்கள் கனிமங்கள் வரை மருத்துவத்துக்கு பயன்படுத்திய முதல் மருத்துவ மரபு தமிழ் மருத்துமான சித்த மருத்துவ மரபு என்பதை இங்கே பதிவு செய்கிறேன். ஆனால் இந்த மசோதா அதை பேச மறுக்கிறது. 






சர்க்கரை நோயாளிகளின் தலைமையகமாக இந்தியாவை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நவீன மருத்துவத்தில் அதற்கு என்ன தீர்வு கண்டுபிடித்திருக்கிறோம் என்பது பெரிய கேள்வி. இந்திய மருத்துவ முறை மற்றும் சித்த மருத்துவ அறிவுசார் ஆய்வுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. 



மதுரை AIIMS அறிவிக்கப்பட்டு ஒரு செங்கலோடு நிற்கிறது. இரண்டாவது செங்கலுக்கு பல ஆண்டுகளாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல NIPER மாறிவிடக் கூடாது. 2011 ல் அறிவிக்கப்பட்ட மதுரை NIPER ஐ உடனே துவக்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.