மக்களவையில் இன்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விவாத நேரத்தின்போது எழுந்து பேசினார். அப்போது, அவர் “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதுசார்ந்து ஒன்றிய அரசு எந்தவித தலையீடும் இல்லாமல் இருக்கிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் துவாரகா மாவட்டத்தில் ஓஹா என்ற இடத்தில் குஜராத் மீனவர்கள், பாகிஸ்தான் கடற்படையால் தாக்கப்பட்டபோது ஒன்றிய அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.
பாகிஸ்தானின் தூதரக உயரதிகாரிகளை அழைத்து தனது கண்டனத்தையும் பதிவு செய்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடந்த அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் ஒன்றிய அரசின் தலையீட்டை கோரி கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை. எந்த எப்.ஐ.ஆரும். பதிவு செய்யப்படவில்லை. இலங்கை அரசை அழைத்து எந்தவித கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை. குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்? தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா?
பாகிஸ்தான் அரசின் அணுகுமுறை என்றால் ஒன்று? இலங்கை அரசின் அணுகுமுறை என்றால் ஒன்றா? இது வலிமையான கண்டனத்திற்குரியது, தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு இந்த அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
அதபோல, மேற்குவங்க மாநிலத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியின் உறுப்பினர் மாஹா மொய்த்ரா நாட்டில் கடந்த சில காலங்களில் உயிரிழந்த விவசாயிகளின் மரணம், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்கள் மரணம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து போதிய புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை என்பது குறித்து எழுப்பிய கேள்விகள் மக்களவையின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்