ஒமைக்ரான் குறித்து புதுச்சேரி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அதிவேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான் என்ற கொரோன தொற்று 18 நாடுகளில் பரவி இருக்கிறது. இது 60 முறை உருமாறக் கூடியது, மிகவும் வீரியமிக்கது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தியாவிலும் 2 பேருக்கு இந்த ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மக்கள் இந்த உருமாறிய கொரோன சம்பந்தமாக விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை, பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. ஆனால், புதுச்சேரி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. புதுச்சேரியில் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் உமிழ்நீர் பரிசோதனையையும் அதிகப்படுத்த வேண்டும்.




ஒமைக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே ஒமைக்ரானை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை உடனடியாக தொடங்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். புதுச்சேரியில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.


மேலும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பல அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்ன? முதல்வர் கொடுத்த அறிவிப்புகளில் 90 சதவீதம் அறிவிப்பாகவே உள்ளது. இந்த அறிவிப்புகளை துரிதமாக நிறைவேற்ற வேண்டும். தேர்தல் சமயத்தில் என்ஆர் காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் அதிகப்படியான நிதியை பெற்று மாநிலத்தில் வளர்ச்சியை காண்போம். சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவோம். கடனை தள்ளுபடி செய்வோம் என கூறினார்கள். ஆனால், புதுச்சேரிக்கு கிடைத்தது என்ன? முதல்வர் சொன்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி தேவை. அதை மத்திய அரசிடமிருந்து இவர்களால் பெற முடியுமா? நான் சவால் விடுகிறேன்.




முதல்வரோ, அமைச்சர்களோ மத்தியில் இருந்து ஒரு பைசா கூட பெற முடியாது. புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் மிகுந்த பணி சுமையில் வேலை செய்து வருகிறார். அவருக்கு நிறைய பொறுப்புகள் உள்ளன. முதல்வர், அமைச்சர்கள் பணியையும் சேர்ந்து பார்ப்பதால் அவருக்கு நேரம் போதவில்லை. எனவே அவர் தெலங்கானா மாநிலத்தை விட்டு புதுச்சேரி மாநிலத்துக்கு நிரந்தர துணைநிலை ஆளுநராக வரவேண்டும்.


துணைநிலை ஆளுநர் முதல்வர் பணியை மட்டும் செய்துவிட்டால் போதாது. மாநில அரசோடு ஒத்துழைத்து மத்தியில் இருந்து நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வரும் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சரை சந்தித்து புதுச்சேரிக்கு தனியாக நிதி கேட்க வேண்டும். அப்போதுதான் மாநிலத்தை காப்பாற்ற முடியும். இது அறிவிப்பு அரசாக இருக்கக் கூடாது. மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றக் கூடிய அரசாக இருக்க வேண்டும். அந்த வேலையை முதல்வர் செய்ய வேண்டும் என நாராயணசாமி கூறினார்.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண