மதுரைக்கு சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்த கருத்து அடிப்படை ஆதாரமற்றது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.     


முன்னதாக, தனது ட்விட்டரில், " பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என்கிறார் விமானத்துறை அமைச்சர் . கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம். நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள்" என்று பதிவிட்டார்.  


 


தற்போது, இதுகுறித்து விளக்கமளித்த விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தனது ட்விட்டர் குறிப்பில், " உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எனவே, பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது என்று சொல்வதில் உண்மை தன்மை இல்லை.


 






 


இதர சர்வதேச விமான நிலையத்துடனான தொடர்பு, விமான பயணிகளின் எண்ணிக்கை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தான் ஒரு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படும். ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை விரிவாக்கிடவும், நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள் அமைக்கவும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  


மூன்றாவதாக, மதுரை விமான நிலையத்தில் தற்போது பன்னாட்டு விமானங்கள் இயங்கிவருகின்றன. எனவே, விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற மதுரை எம்.பியின் வேண்டுகோளை விளங்கி கொள்ள முடியவில்லை.  


இறுதியாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து அதிகப்படியான பன்னாட்டு விமானங்களை இயக்கும் விமான நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.