கரூர் ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய புகழ்ச்சோழர் மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மையை, ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.




மேளதாளங்கள் முழங்க புகழ்ச்சோழர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் விநாயகர், வள்ளி,  தெய்வானை சமேத முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பிகை சுவாமிகளை தோளில் சுமந்தவாறு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் உள் புறப்பாடு நடைபெற்று ஆலய வாசலில் உள்ள ரக வாகனத்தில் கொலுவிருக்க செய்தனர். பின்னர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமிகள் திருவீதி ஆலயத்தில் தெற்கு மடவிளாகம், மேற்கு மடவிளாகம், வடக்கு, மட வளாகம், கிழக்கு மடவிளாகம் வழியாக ஆலயம் வந்தடைந்தனர். 




ஆலய வாசலில் நடராஜர் எதிர்புறம் நின்று அருள் பாலிக்க அதற்கு நேர் எதிர்புறம் சிவகாமசுந்தரி அம்பிகை அருள் பாலித்தார். பின்னர் ஓதுவார் அவர்கள் மட்டையடி நிகழ்வைப் பற்றி கூடியிருந்த பக்தர்களுக்கு நீண்ட கதையாக கூறிய பிறகு மீண்டும் சிவகாமசுந்தரி அம்பிகை நடராஜ பகவானை தேடி அவர் இருக்கும் இடத்திற்கு வந்தார். 




கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்


நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் காரணமாக தனித்தனியாக எழுந்தருளினர். அப்போது அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து, அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்தார். இதனை விளக்கும் விதமாக தண்டபாணி தேசிக ஓதுவார், சுந்தரராக தன்னை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார். அப்போது 2-வது முறையாக சென்ற போது, அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு ஆகும்.




அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிக ஓதுவாருக்கு வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சண்டிகேசுவரருடன், சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும் போது அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன், சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் முண்டியடித்து கொண்டு வந்து, தங்களது முதுகினை காட்டி வாழைமட்டையால் அடி வாங்கி சென்றனர். இதன் மூலம் குழந்தை செல்வம், வியாபார விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகம் ஆகும்.




கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு மட்டையடி திருவிழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். பக்தர்களுக்கு காட்சி வழங்கிய பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பிகை, விநாயகர், வள்ளி சமேத பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்கள் மீண்டும் ஆலயம் குடி புகுந்தனர்.