பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுக்கு பரிசுகள் வழங்கி சிர்றப்புரையாற்றினார்.


அப்போது பேசிய அவர்,  “எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அமைச்சராக இருந்தாலும் சரி, மேயராக இருந்தாலும் சரி, துணை முதலமைச்சராக இருந்தாலும் சரி, தற்போது முதலமைச்சரான பின்னும் சரி பேசுவதை விட செயலில் நம் திறமையை காண்பிக்க வேண்டும் என்ற உணர்வில்தான் என் கடமையை ஆற்றிவருகிறேன். ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள்தான் ஆகின்றது. இந்த ஆட்சி ஐந்து வருடத்தை நிறைவு செய்கையில் இதேபோல் பாராட்டு இருந்தால்தான் என் உழைப்புக்கு அங்கீகாரம்.


தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுவிட்டு கருணாநிதி நினைவிடத்திற்கு நேராக சென்றேன். அதன்பிறகு பத்திரிகையாளர்கள் என்னை சூழ்ந்துகொண்டு வெற்றி குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார்கள். அப்போது, எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்காதவர்கள் வருத்தப்பட வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்தேன்.


கொளத்தூரை பொறுத்தவரை இயற்கையாகவே எனக்கு திருப்தி வந்துவிடும். இந்தத் தொகுதியை பொறுத்தவரை நான் சுயநலக்காரன்தான். எந்த நிகழ்ச்சியை இங்கு கொண்டாடினாலும் இங்கு வரும்போது எனக்கு பெருமை கிடைத்துவிடுகிறது. அந்த அடிப்படையில்தான் இந்த கிறிஸ்துமஸ் விழாவில் உங்களோடு இணைந்து வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


இந்தத் தொகுதியில் பல்வேறு மதத்தினர், மொழியினர் இருக்கிறீர்கள். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கலை கொளத்தூரில் கொண்டாடுகிறோம். அதேபோல் ரம்ஜான் விழா நடத்துகிறோம். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மகிழ்விக்கும் விதமாக எல்லா மதத்தினரையும் மகிழ்விக்கும் விதமாகவும், சமத்துவத்தை சகோதரத்துவத்தை போதிக்கும் விழாவாக நடக்கிறது.


அன்பை விதைப்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. அனைத்து மதங்களும் ஒன்றுதான் என்ற எண்ணத்தில் நான் வந்திருக்கிறேன்.


தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள் நீங்கள் தட்டாமலேயே, கேட்காமலேயே மக்களுக்கு வழங்கிவருகிறோம். இந்த விழாவின் அடிப்படையே கருணைதான். 


பெயரில் மட்டுமில்லாமல் குணத்திலும் கொண்டிருக்கும் கருணாநிதியின் மகன்  உங்களுக்கு வாழ்த்து சொல்ல இங்கு வந்திருக்கிறேன்.


திமுக தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளில் 300க்கும் மேற்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றிவிட்டோம். மீதம் இருப்பவைகளும் நிறைவேற்றப்படும். ஐந்து வருடங்களில் செய்ய வேண்டியதை ஐந்து மாதங்களில் செய்துவிட்டதாக நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் பாராட்டுகின்றனர். மக்களிடம் சென்று அவர்களுடன் இருந்து அனைத்து பணிகளையும் செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து செய்வோம் என்ற உறுதியை அளிக்கிறேன்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண