உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழா மதுரையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் நாளை மிகவும் கோலாகலமாக நடக்க உள்ளது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.


வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபோகத்திலே, அழகர் என்ன நிறத்தில் பட்டு அணிந்து கொண்டு இறங்குகிறார்? என்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் மிகவும் கவனமாக உற்றுநோக்கப்படும்.


பட்டைத் தேர்வு செய்வது எப்படி?


.வைகை ஆற்றில் களமிறங்கும் முன்னர் கள்ளழகருக்கான ஆடைகள், ஆபரணங்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் கொண்டு வரப்படும். பட்டாடைகள் நிறைந்த அந்த மரப்பெட்டியில் கோயிலின் தலைமை பட்டர் தனது கையை விட்டு ஏதாவது ஒரு பட்டை எடுப்பார். தலைமை பட்டர் கையில் சிக்கும் அந்த பட்டாடையே கள்ளழகருக்கு அணிவிப்பார்கள். அந்த பட்டாடையின் நிறத்திற்கு ஏற்ப அந்தாண்டு நாட்டின் செல்வ, செழிப்பு அமையும் என்று ஐதீகம்.


எந்த நிறத்திற்கு என்ன பலன்கள்?


வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சிவப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை, ஊதா ஆகிய வண்ணங்களில் ஏதாவது ஒரு நிறத்திலான பட்டை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்குவார்.



  • கடந்த சில ஆண்டுகளாகவே வைகை ஆற்றில் களமிறங்கும் கள்ளழகர் பச்சை நிறப்பட்டை அணிந்தே ஆற்றில் இறங்குகிறார். பச்சை பட்டை உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினால், அந்தாண்டு நாடே செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

  • வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பட்டாடையை அணிந்து கள்ளழகர் இறங்கினால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும் என்று அர்த்தம்.

  • வைகை ஆற்றில் இறங்கும் அழகர் மஞ்சள் பட்டை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தந்தால் அந்தாண்டு மங்களகரமான நிகழ்வுகள் அரங்கேறும்.

  • அதேசமயம் கள்ளழகர் சிவப்பு பட்டாடை அணிந்து வந்தால் அந்த வருடம் நாட்டில் அமைதி நிலைக்காது. விவசாயத்தில் போதிய விளைச்சல் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்று ஐதீகம்.


கள்ளழகர் அணிந்து இறங்கும் ஒவ்வொரு பட்டிற்கும் ஒவ்வொரு அர்த்தம் என்பதால், அழகர் ஆற்றில் இறங்குவதை காண கூடும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் எண்ணங்களும் அழகர் எந்த நிறத்தில் பட்டாடை கட்டி இறங்குவார் என்பதிலே இருக்கும். இந்த நிலையில், இந்தாண்டு வைகையில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தரும் கள்ளழகர் எந்த நிற பட்டு அணிந்து வரப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


மேலும் படிக்க: Chithirai Festival: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா; மதுரை மாவட்டத்துக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை..!


மேலும் படிக்க: மதுரையின் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்தத்துடன் தொடக்கம்