நாகர்கோவில் குருசடியைச் சேர்ந்த கே.பரந்தாமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் 100% மாற்றுத்திறனாளி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். மாற்றுத்திறனாளிகள் கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் ஆணைய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 


இந்த உத்தரவின் அடிப்படையில் எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எலும்பியல் தொடர்பான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஆணையர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்துள்ளது, உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று எனது விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு கார் வாங்க ஜிஎஸ்டி, சாலை வரி, டோல் கட்டண சலுகை அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். 


இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், மாற்றுத்திறனாளிகள் வாகனம் வாங்க சலுகை அளிக்கும் பரிந்துரைகள் தற்போது ஏற்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலித்து 31.1.2022-க்குள் உரிய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.





 

தனியார் நிலத்தில் குவாரிக்கு அனுமதி வாங்கி அரசு நிலத்தில் கிராவல் மண் எடுத்த விவகாரம் - மதுரை ஆட்சியர் பதில் தர உத்தரவு

 

மதுரை மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் மேலூர் தாலுகா, கீரனூர் கிராமத்தில் கிராவல் மண் குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 90 நாட்கள் வரை கிராவல் மண் சுமார் 1.5 மீட்டர் ஆழம் வரை குவாரி அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

 

ஆனால், தற்போது சுமார் 5 மீட்டர் வரை ஆழத்திற்கு குவாரி அமைத்து கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள அரசு நிலத்திலும் கிராவல் மண் எடுக்கப்பட்டுள்ளது. கிராவல் மணல் எடுக்க அனுமதி கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி உடன் முடிவடைந்தது. ஆனால் அரசு அனுமதித்த நாட்களைவிட அதிக நாட்கள் குவாரி அமைத்து கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். இது முற்றிலும் சட்ட விரோதமான செயலாகும். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 

 

எனவே, மேலூர் தாலுகா கீரனூரில் தனியார் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதி பெற்று அரசு நிலத்தில் சட்டவிரோத குவாரி அமைத்து கிராவல் மண் எடுத்துவரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், குவாரி அமைக்க அரசு அனுமதித்த அளவு மற்றும் தற்போது எந்த அளவிற்கு குவாரியில் மணல் எடுக்கப்பட்டுள்ளது எனபது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.