மாநில அரசின் சார்பில் கடந்த மாதம்  அம்பத்தூரில் ஆவின் பெட்ரோல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில், அதுதொடர்பாக பலருக்கும் தெரியாத நிலையில் தற்போது அதனை டுவிட்டரில் திமுகவினர் வைரலாக்கி வருகின்றனர். 


ஜூன் 2017 நிலவரப்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இது டைனமிக் எரிபொருள் விலை முறை என்று அழைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் காலை 06:00 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில்,  இதற்கு முன்பு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் விலை மாற்றியமைக்கப்பட்டது. 


கடந்தாண்டு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது, கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கின்போது, பொது போக்குவரத்து இயங்காதபோது, தங்களின் சொந்த வாகனத்தை மக்கள் இயக்கியபோதுதான் பெட்ரோலின் விலை மலமலவென அதிகரித்தது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் குறைவதும், தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஏறுவதும் எப்போதும் வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் ஏறியபோது,  பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாயை திமுக அரசு குறைத்தது.


அதன்பிறகு, கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. நாங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துவிட்டோம் மாநில அரசு இன்னும் குறைக்கவில்லை என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுக அரசை விமர்சனம் செய்தன.


இந்த நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ஆவின் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதாவது அரசின் சார்பில் ஆவின் பெட்ரோல் நிலையம்.


அம்பத்தூர் தொழிற்பேட்டையில், ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் கட்டடம், இயந்திரம், சாலை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஆவின் சில்லறை விற்பனை நிலையத்தினை இயக்கும் பொறுப்பை ஆவின் இணையம் வழி நடத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த ஆவின் பெட்ரோல் நிலையத்தில், சென்னை ஆவின் இணையத்தின் வாகனங்கள், சென்னை பெருநகர பால் பண்ணைகளில் இயங்கி வரும் பால் பாக்கெட் ஒப்பந்த வாகனங்கள், மாவட்ட ஒன்றிய வாகனங்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய ஒப்பந்த வாகனங்கள், ஒன்றிய பால் டேங்கர் ஒப்பந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சிறிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் ஆயில் சில்லறை விற்பனை நிலையம் நாளொன்றுக்கு 4000 லிட்டர் பெட்ரோல், 6000 லிட்டர் டீசல் மற்றும் ஆயில் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த ஆவின் பெட்ரோல் நிலையம், கடந்த மாதம் திறக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் சார்பில் இப்படி ஒரு பெட்ரோல் நிலையம் இயங்கப்பட்டு வருகிறது என்று பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. சில தினங்களாக சமூகவலைதளமான டுவிட்டரில் இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது வைரலாகி வருகிறது.


ஆனால், இது புதுத்திட்டம் அல்ல. கடந்த 2018ஆம் ஆண்டில் சேலத்தில் இதேபோன்ற பெட்ரோல் நிலையத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்துள்ளார். தளவாய்ப்பட்டியில் உள்ள சேலம் உருக்காலை சாலையில் உள்ள சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் அமைத்துள்ளது. மாநிலத்தில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் அமைக்கப்படும் முதல் ஐஓசிஎல் சில்லறை விற்பனை நிலையம் இதுவாகும்.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண