கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது தீவிரம் எடுத்துள்ளது. இதன் காரணமாக தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு தினமும் இரவில் ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
இந்தச் சூழலில் பொங்கலும் இன்னும் சில நாள்களில் வரவிருப்பதால் அதற்கான வழிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களுக்கும், 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறியுள்ளது. அரசின் இந்த முடிவு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விரைவில் நடக்கவிருக்கிறது. மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதால் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
போட்டி நடைபெறும் இடத்தை வருவாய் துறையினர், மாநகராட்சியினர் பார்வையிட்டுவருகின்றனர். இதற்கிடையே காவல்துறை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்கள் மட்டுமே போட்டியை பார்வையிட வேண்டும் வெளியூரில் இருந்து வருகை தரும் உறவினர்களை அனுமதிக்கக் கூடாது என்ற துண்டுபிரசுரம் வழங்கப்படுகிறது.
அந்தத் துண்டு பிரசுரத்தை பெற்றுக்கொண்ட திரைப்பட நடிகரும், குற்றப் பரம்பரை, பட்டத்து யானை உள்ளிட்ட கதைகளை எழுதிய எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆனால் போட்டியை காண 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இப்படி நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமலேயே இருக்கலாம்.
தற்போதைய அரசாங்கம் நல்ல அரசாங்கமாக இருக்கிறது. முதலமைச்சரும், அவருடன் இருக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் முற்போக்காக இருக்கிறார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இப்படி அரசு நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜல்லிக்கட்டு என்பது திருவிழா.
ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆள்கள் இல்லாமல் காளை மாடுகளை அவிழ்த்துவிட மாட்டின் உரிமையாளர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே தமிழ்நாடு அரசு தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி நடத்த வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்திவிடலாம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: வெற்றிமாறனுக்கு அடுத்து சூரியை இயக்கும் அமீர்?