Madurai High Court; கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட மேல் முறையீட்டு வழக்கினை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு ஏற்றுள்ளது.
ஆணவக்கொலை கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் தொடரப்பட்ட வழக்கினை மனுக்களை இணைத்து, அவை தொடர்பான வழக்குகளை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
கோகுல்ராஜ் தாயார் சித்ரா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது மகன் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் 10 நபர்களைக் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கியது. அதேசமயம் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய ஐவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இதேபோல ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.
ஜாமீன் மனுவை திரும்ப பெற உத்தரவு:
ஏற்கனவே கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்குவது குறித்து, மதுரைக் கிளை முடிவெடுக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்து, ஜாமீன் மனுவை திரும்ப பெற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
சாகும்வரை சிறை:
நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.
யுவராஜ் தரப்பு:
இந்த வழக்கில், ’’சிசிடிவி காட்சிகள், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, தலைமறைவாக இருந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. சிசிடிவி காட்சிகளைப் பொறுத்தவரை கோகுல்ராஜை கடத்தியதாகவோ, கொலை செய்ததாகவோ பதிவுகள் இல்லை. ஆனால் அவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிகாரிகளும், நிபுணர்களுமே. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள நிலையில் இவற்றைக் கருத்தில் கொண்டு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதோடு, கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்தும், அதுவரை ஜாமீன் வழங்கியும் உத்தரவிட வேண்டும்" என யுவராஜ் தரப்பினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆணவக்கொலை கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் தொடரப்பட்ட வழக்கினை மனுக்களை இணைத்து, அவை தொடர்பான வழக்குகளைப் பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.