ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று மதுரை வருகிறார். இந்த நிலையில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் நேற்று அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சத்யசாய் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனால், அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் இருந்து அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகளுக்கான இடங்களை தெரிந்து, நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் உள்ள சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்திட வேண்டும். அவர் பயணிக்கும் நேரங்களில் சாலைகளில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.




ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகையை முன்னிட்டு சாலைகளை சுத்தமாக வைத்திருக்க மாநகராட்சி உதவி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் வருகையை முன்னிட்டு சாலைகளை தூய்மைப்படுத்த மாநகராட்சி உதவி ஆணையர் உத்தரவிட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது தி.மு.க. ஆட்சியா? பா.ஜ.க. ஆட்சியா? இது தமிழ்நாடு அல்லது உத்தரபிரதேசமா? என்று சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுத் தொடங்கியது.


இதுதொடர்பாக, விளக்கமளித்த மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஆர்.எஸ்.எஸ்.தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவரைப் போன்ற உயர் பாதுகாப்பு வி.ஐ.பி.க்கள் வரும்போது, போலீசார் அறிவுறுத்தலின்பேரில் இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பித்து அவர்கள் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்த மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும். அவர்கள் செல்லும் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்கவே இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.




இருப்பினும், இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் தீவிரமாக எதிர்த்து வரும் கட்சிகளில் தி.மு.க.வும் ஒன்றாகும். ஆனால், தி.மு.க. ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்காக பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தி.மு.க.வினருக்கும், கூட்டணி கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சிலர் சமூக வலைதளங்களில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.விற்கு எதிரான தி.மு.க.வின் முழக்கங்கள் பொய்யானதா என்ற கேள்விகளும் எழுந்தது.


 இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி மதுரையில் சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகத்தை பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.