முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி. சுவாமி நாதன் கூறினார்.


ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில், ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் கார் ஒட்டுநர் ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும்  நள்ளிரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணைக்காக மூன்று பேரையும் விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லட்சுமி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள், விசாரணை செய்யுங்கள். ஆனால், அவரின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம்” என்று  நீதிபதி ஜி. சுவாமி நாதன் கூறினார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. சுவாமி நாதன், சமீபத்தில் யூடியூபர் மாரிதாஸ் வழக்கை விசாரித்தவர் என்பதும், அந்த தீர்ப்பு விமர்சிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது




ராஜேந்திர பாலாஜி வழக்கு விவரம்:


ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர். 


இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 6 தனிப்படைகளை அமைத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டிவருகிறது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண