மதுரை மாவட்டம், ஊமச்சிக்குளம் அடுத்த வீரபாண்டியில் கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, இந்தாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் நாட்டு இன மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  கலப்பின மாடுகள் டோக்கன் கொடுக்க மாட்டோம். தி.மு.க ஆட்சியில் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த அனுமதி பெற்று தரப்பட்டது. நாட்டு மாடு இனங்களை அதிகப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 




வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பல்வேறு துறையின் மூலம் மக்களுக்கு நலத்திட்டங்கள்  வழங்கப்படுகிறது. தினமும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு காளைமாடுகள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். நாட்டு மாட்டுகள் தான் நல்லது. நாட்டு மாடுகளில் கிடைக்கும் பால் ஆரோக்கியமானது. அதனால் நாட்டு மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்க கால்நடை மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். அலங்காநல்லூரில் பிரம்மாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும். கலப்பின மாடுகளுக்கு டோக்கன் வழங்கப்படாது. கடந்த ஆட்சியில் நடைபெற்றுது போல் ஜல்லிக்கட்டு நடைபெறாது. இந்த முறை மிகவும் நேர்த்தியாகவும், முறையாகவும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தமிழ்நாட்டில் ஒமிக்காரன் வைரஸ் தொற்று அதிகமாக பரவவில்லை. அதை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்” என்றார்.




உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டானது தை மாதம் 1-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தொடங்கி மறுநாட்கள் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும். பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர வாடிவாசல் உள்ள நிலையில் அவனியாபுரத்தில் நிரந்தர வாடிவாசல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கு ஒரு பக்கம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும்தான் அனுமதிக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளது, ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.