சென்னை பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய தலைப்பில் நடக்கவிருந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அணியான ஏபிவிபி, இந்து அமைப்புகள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவது எப்படி என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால், சமூக வலைதளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

Continues below advertisement


இந்து அமைப்புகள் அழுத்தம் கொடுக்க காரணம் என்ன?


நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு, சொற்பொழிவு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், வரும் 14ஆம் தேதி, "இந்தியாவில் கிறிஸ்துவத்தை பரப்புவது எப்படி" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.


இதற்கான அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, கற்பிக்கும் கோயிலான சென்னை பல்கலைக்கழகத்தை கிறிஸ்தவத்திற்கான பிரச்சார வாகனமாக மாற்றுவதாகக் குற்றம் சாட்டி எக்ஸ் தளத்தில் பலர் விமர்சித்தனர்.


இந்த சொற்பொழிவை நடத்தக் கூடாது என ஏபிவிபியும் இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய அனுமதி தந்ததற்கு பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கண்டனம் விதித்திருந்தார்.


சர்ச்சையில் சிக்கிய சென்னை பல்கலைக்கழகம்:


இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் பேராசிரியருமான எஸ். ஏழுமலை, ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய விளக்கத்தில், "மேற்கூறிய தலைப்பில் சொற்பொழிவை நடத்துவதற்கு பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்புதல் பெறவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, விரிவுரையை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அறிவுறுத்தினோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஏபிவிபி தரப்பில் கூறுகையில், "மதத்தை பரப்பும் நோக்கில், இந்தியாவில் கிறிஸ்தவத்தை எவ்வாறு பரப்புவது என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுவது மாநில பல்கலைக்கழகத்திற்கு  பொருத்தமற்றது என நாங்கள் சுட்டிகாட்டினோம். ABVP-யின் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பல்கலைக்கழக நிர்வாகம் நிகழ்வை ரத்து செய்தது" என தெரிவித்துள்ளது.