மாசி மகத்தை முன்னிட்டு, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் நாளை (மார்ச் 12) விடுமுறை அளிக்கப்படுவதாக தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


2025ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மாசி மகம் கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தின் 12ஆவது நாளே மாசி மகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோயிலின் உற்சவ மூர்த்திகள், அருகிலுள்ள ஆறுகள், குளம், நீர் நிலைகளில் சுத்தப்படுத்தப் படுகின்றன.


இந்த நிலையில், மாசி மகம் 12 சைவ தலங்களிலும் வைணவ தலங்களிலும் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை (மார்ச் 12) தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை, அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ளார்.


மார்ச் 29ஆம் தேதி வேலை நாள்


அதேபோல, அரசு அலுவலகங்களுக்கும் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மார்ச் 29ஆம் தேதி சனிக் கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


மார்ச் 13, 14ஆம் தேதிகளில் விடுமுறை


மாசிமகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13ஆம் தேதியும், புதுச்சேரி 14ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும் அன்றைய தினம் பொது தேர்வு ஏதேனும் இருந்தால் வழக்கம்போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.