சேலம் மாநகராட்சியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வழங்குவதால், வாங்கிய கடன்களுக்கு பணம் செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளதாக கூறி, குணாளன் என்பவர் உடல் முழுவதும் கருப்பு நிறத்தை பூசிக்கொண்டு நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினார். மேலும் சிக்கன நாணய சங்கத்தின் மூலமாக பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஊழல் செய்து தூய்மை பணியாளர்கள் மீது வட்டி அதிகளவில் போடுவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதால் தூய்மை பணியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்தாார். மேலும் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் மற்றும் நல அலுவலர் யோகநாத் ஆகியோர் மீது விசாரணை நடத்தி, இடமாற்றம் அல்லது பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதேபோன்று, சேலம் மாநகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கியது. 13 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் இத்திட்ட பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் படுத்து உருண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இத்திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், சீதலமடைந்த மற்றும் மேடுபள்ளமான சாலைகளை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற கோரி மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து சென்றனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினரின் இந்த நூதன ஆர்ப்பாட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
பின்னர், சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (29). பெயின்டிங் வேலை பார்த்து வந்த ரகுநாதன் மனைவி மகாலட்சுமி மற்றும் சசி (5), கிருத்திகா (2) என இரு பெண் குழந்தைகளும் உள்ளனர் ரகுநாதன் கடந்த தீபாவளி என்று அதே பகுதியை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேட்டூர் அரசு மருத்துவமனையிலேயே வைத்து ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் மனைவி மகாலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் பெண் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விதவி உதவித்தொகை மற்றும் அரசு சார்பாக ஏதேனும் வேலை அளிக்க வேண்டும் என்று மனு அளிக்க வந்துள்ளார். அதனை வாங்கிய அதிகாரிகள் உனக்கெல்லாம் எப்படி அரசு வேலை கொடுக்க முடியும் என்று ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வெளியே வந்த பெண் கணவனை அரசு மருத்துவமனையில் அனுமதித்து நிலையில் அரசு மருத்துவமனையிலேயே குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெண் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட காசு இல்லை என்பதால் தான் உதவி கேட்டு வந்தோம். ஆனால் உனக்கெல்லாம் எப்படி அரசு வேலை போட முடியும் என ஏளனமாக பேசுவதாக கூறி இரண்டு பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.