கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. புலி படத்தில் பிரபு, ஸ்ரீதேவி, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமையா, கருணாஸ், சுதீப், தம்பி ராமையா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.


இயக்குனர் சிம்புதேவன் புலி படத்தை இயக்கியிருந்தார்.விஜய் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.


இந்த நிலையில் புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.  


அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது. 


வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.


தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண