தமிழ்நாடு கோயில்களில் அறங்காலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி கருத்தினை தெரிவித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


அறங்காவலர்கள் தேர்வுக்கு மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் சொத்துகள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.


கோயில் நிலத்தை மூன்றாவது நபருக்கு மனுதாரர் கிரயம் செய்துள்ளார் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை முடக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை கூறியுள்ளது.


கோயில்களை பாதுகாப்பாக கூறி வழக்கு தொடரும் நிலையில் கோயில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.


கோயில் நிலத்தை விற்பனை செய்த எனது சகோதரரை நிலத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தினேன் என்று மனுதாரர் கூறியுள்ளார்.  வழக்கு விசாரணையை நீதிபதிகள் மாகாதேவன், ஆதிகேசவலு அமர்வு ஜனவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.


முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மனுதாரர் முன்வைத்தார்.


தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை பொறுத்தவரை, அறங்காவலர்கள் நியமனம் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது.


 பரம்பரை அல்லாத திருக்கோயில்களில் அறங்காவலர்களாகச் செயல்பட விருப்பமுடையவர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகங்கத்தில் உரிய விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழுள்ள திருக்கோயில்களை நிர்வகிப்பதற்கான அமைப்பாக அறங்காவலர்கள் குழு அமைக்கப்படுகிறது. 


தமிழ்நாட்டில் 41 ஆயிரத்து 794 இந்து சமயத் திருக்கோயில்கள், 19 சமணத் திருக்கோயில்கள், 298 திருமடங்கள், 456 திருமடத்துடன் இணைந்த திருக்கோயில்கள், 995 அறக்கட்டளைகள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
 
இத்திருக்கோயில்களில் 8,059 திருக்கோயில்கள் பட்டியலிடப்பட்டவை என்றும், 36,229 திருக்கோயில்கள் பட்டியலிடப்படாதவை என்றும் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.


மொத்தமிருக்கும் 44,288 திருக்கோயில்களில், ரூபாய் ஐந்தாயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவை – 22, ரூபாய் பத்தாயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்டவை – 36207, பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவை – 5,022, இரண்டு லட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் கொண்டவை – 782, பத்து லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் கொண்டவை – 2,255 என்று திருக்கோயில்களின் ஆண்டு வருமான அடிப்படையிலும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.


இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ், இந்து சமயத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்திட, பரம்பரை அறங்காவலர்கள் குழு, பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் குழு என்று இரு வழிகளிலான அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.