உங்களை அதிமுக பொதுச்செயலாளர் என எப்படி குறிப்பிட முடியும் என எடப்பாடி பழனிசாமியிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 


அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியில் பல குழப்பங்கள் நிலவருகிறது. அவரது மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா பொதுச்செயலாளர் ஆனதுமே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். 


அதன்பின் சசிகலா கைக்காட்டிய இபிஎஸ்சிடம் அதிமுக சென்றது. ஆனால் அதற்கு எதிராக பலமுறை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக திழழ்ந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி கட்சியை  மீட்க போராடி வந்தார். ஆனால் இபிஎஸ் சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு ஓபிஎஸ்சுடன் கைகோர்த்து அதிமுகவில் அதுவரை இல்லாத ஒருங்கணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கினர். 


அதுவும் நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஆட்சி கையில் இருந்தவரை இருவரும் இரட்டைக்குழல் துப்பாக்கி என காட்டிக்கொண்டு செயல்பட்டனர். ஆனால் சில நாட்களிலேயே இபிஎஸ் தலைமையில் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கினர். மேலும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 


இந்நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிடக்கோரியும் ஓபிஎஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சசிகலா தரப்பிலும் கே.சி.பழனிசாமி தரப்பிலும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 


இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எனக்கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார். 


ஆனால் தற்போது பதில் மனுத்தாக்கல் செய்தபோது அதிமுக பொதுச்செயலாளர் என மனுத்தாக்கல் செய்துள்ளார். இதைப்பார்த்த நீதிபதி நீங்கள் எப்படி பொதுச்செயலாளர் எனக்கூற முடியும். அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது உங்களை எப்படி பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். 


மேலும், மனுவை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தனது தவறுக்காக மன்னிப்பு கோரிய இபிஎஸ் தரப்பு திருத்தப்பட்ட மனுத்தாக்கல் செய்ய உள்ளது. இதையடுத்து இதுகுறித்த வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.