MR Vijayabaskar: எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீசார் தரப்பில் கேட்கப்பட்ட அனுமதியை நிராகரித்துவிட்டு, மீண்டும் ஒரு நாள் விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Continues below advertisement

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த கேட்ட அனுமதியை நிராகரித்துள்ளது.

Continues below advertisement

 


கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக பதிவு செய்ததாக கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரில், பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 


கடந்த 22-ஆம் தேதி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை இரண்டு நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த 2 நாள் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஏற்கனவே பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டிருந்த நிலையில், வாங்கல் காவல் நிலைய போலீசார் நீதிபதியிடம் அவரை 7 நாள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். ஆனால், ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதி வழங்கி இருந்தார்.

 


இந்த நிலையில், நேற்று மாலை கரூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், சிபிசிஐடி காவலில் வைத்து விசாரணை நடத்தவும், வாங்கல் போலீசார் தரப்பில் நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தவும் நீதிபதியிடம் அனுமதி கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி போலீசார் தரப்பில் கேட்கப்பட்ட அனுமதியை நிராகரித்துவிட்டு, வாங்கல் காவல் நிலைய போலீசார் மீண்டும் ஒரு நாள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

 


முன்னதாக சொத்தின் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலியாக சான்று வழங்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் உள்ள  வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 2 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement