இந்தியாவில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும், சமூகத்திற்கும் தீங்காக அமைந்து வருகிறது.


குட்கா, பான் மசாலா மீதான தடை:


கடந்த 2006ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது உணவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.


அவ்வப்போது, சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்பவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீடும் தாக்கல் செய்யப்பட்டது.


சட்டம் வழிவகுக்கவில்லை:


சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட, இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு ஆகியோர் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது,  உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.


ரத்து:


மேலும், புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை எனவும், தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறி, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.


மேலும், இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த அதிரடி உத்தரவு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க:Erode East By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல்: கமல்ஹாசனின் முடிவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி


மேலும் படிக்க: TN Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை நிலவரம் இதோ..