கமலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் ஆதரவு:
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்படும் எனவும், வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிக்கு மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கமல்ஹாசன் அறிவித்தார்.
கமல்ஹாசன் அறிக்கை:
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் என்பவரை நியமித்துள்ளேன். அவருக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி, மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவைப் பெற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு கோரிய காங்கிரஸ்:
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இளங்கோவன் ஆதரவு கேட்டு வந்தார். அந்த வகையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவை கோரி கமலை இளங்கோவன் 23ஆம் தேதி சந்தித்தார். சந்திப்பு நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பின் மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இடைதேர்தல்:
காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருமகன் ஈவெராவின் தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இடைதேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.