அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் 2012ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு முதலில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். ராமஜெயம் மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்படி சிபிஐக்கு 2017ல் உத்தரவிடப்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 2017ஆம் ஆண்டு முதல் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. எனினும் தற்போது வரை சிபிஐ காவல்துறையினரால் கொலை குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை. இதைத் தொடர்ந்து தன்னுடயை சகோதரர் கொலை வழக்கு விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று கோரி கே.என்.ரவிச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். மேலும் சிபிஐ விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றும், தமிழக காவல்துறையே விசாரிக்க வேண்டுமெனவும் ராமஜெயத்தின் சகோதரர் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் நீதிபதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, இந்த வழக்கை சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை. எனவே ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தக்கட்ட விசாராணையை சிறப்பு குழு புலனாய்வு தொடர வேண்டும்.
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயை சேர்ந்த ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணை முடியும்வரை ரவிக்கு வேறு பணிகளை சிபிஐ ஒதுக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தக் குழுவின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் வகையில் 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையை சிபிசிஐடி உயர் அதிகாரி சகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அத்துடன் இந்த வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்