கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை காணச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, கொரோனா தடுப்பூசியால் தான் விவேக் பாதிக்கப்பட்டதாக கூறினார். இதுதொடர்பாக, மன்சூர் அலிகான் மீது சென்னை மண்டல அதிகாரி புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது வடபழனி போலீஸார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கில் சென்னை மாவட்ட நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.




இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது மற்றும் பதற்ற நிலையை உருவாக்கக்கூடாது என்று அறிவுறுத்தி மன்சூர் அலிகானுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும், கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.2 லட்சத்தை சுகாதார செயலர் பெயரில் டிடியாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.