மதுரையைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பு இணையர்கள் தங்களுக்குப் பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கக் கோரித் தொடர்ந்த வழக்கின் மீதான அடுத்தக்கட்ட விவாதம் நேற்று நிகழ்ந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதல்ல. கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் இறுதியாக ஒருமுறை பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரப்பட இருக்கிறது.
இணையர்களின் பெற்றோருக்கு இது தொடர்பாக உளவியல் ஆலோசனைப் பெறும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த ஆலோசனையில் தற்போது ஓரளவு முன்னேற்றம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. நீதிமன்ற வழக்குகளைப் பார்வையிடும் பத்திரிகையாளர் மீரா இதுகுறித்து நம்மிடம் தகவல் பகிர்கையில்
‘மதுரை தன்பால் இணையர்களிடையே தங்களுடைய உறவு குறித்த ஆழமான புரிதல் இருக்கிறது. மேலும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அத்தனை அன்புடன் இருக்கிறார்கள்.தங்களது பெற்றோர் மீதும் தீராப் பிரியத்துடன் இருக்கிறார்கள். அதனால் தாங்கள் பிரிக்கப்பட்டு விடுவோம் என அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களது கல்வியைத் தொடர வேண்டும் என்றும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்றும் தெளிவான பார்வையுடன் இருக்கிறார்கள். பெற்றோர்கள் இந்த இரண்டு பெண்களின் உறவைச் சமூகம் எப்படிப் பார்க்கும் என பயப்படுகிறார்கள். இந்த உறவு பற்றிய புரிதல் இல்லாததால் அவர்களுக்கு அந்த அச்சம் நிலவுகிறது. அவர்களது அச்சத்தைப் போக்க தொடர் ஆலோசனை வழங்கப்பட்டது. இருப்பினும் மாற்றம் என்பது ஒரே நாளில் நிகழ்ந்துவிடுவதல்ல. கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் இறுதியாக ஒருமுறை பெற்றோர்களுக்கு ஆலோசனைத் தரப்பட இருக்கிறது. இது அத்தனையுமே கோர்ட் ஆர்டர் பதிவு செய்துள்ளது’ என்றார்.
மேலும் பெற்றோருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் முன்னேற்றம் இருப்பதை அடுத்து இது போன்ற தன்பால் ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ வழிவகுக்கும் வழிகாட்டுதல்களை (Guidelines) வரையறுக்க நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலின் மீது நேற்றைய அமர்வில் பதிலளித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், ‘தன்பால் ஈர்ப்பு என்கிற உறவுமுறையே தனக்கு இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதனால் அதுகுறித்த வழிகாட்டுதல்களை அதை நான் நன்கு புரிந்துகொண்ட பிறகு வரையறுக்க வேண்டும். வழிகாட்டுதல்கள் எனது மூளையிலிருந்து அல்லாமல் இதயத்திலிருந்து வரையறுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதனால் அதுதொடர்பான உளவியல் கல்விக்கு (Psycho education) நான் என்னை உட்படுத்திக் கொள்ளப் போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஒருவர் தன்பால் ஈர்ப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள முன்வருவது சமூகத்திலும் சாமானியர்கள் புரிந்துகொள்ள முன்வருவார்கள் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.