Senthil Balaji Case: அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


செந்தில் பாலாஜி வழக்கு:


அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையுடன், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது காவல் 7 முறை நீடிக்கப்பட்ட நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.


இந்த நிலையில், நேற்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.  இதனை அடுத்து, சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.


இதனை அடுத்து, நேற்றைய தினமே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில், நேற்றும் உடல்நலக்கு குறைவால் பாதிக்கப்பட்டதாக மனுவில் கூறியுள்ளார். 


அமலாக்கத்துறைக்கு உத்தரவு:


மேலும், சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதால் ஜாமீன் மனு வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமமாக உள்ளது என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ஸ்டான்லி மருத்துவமனையில் 9 மருத்துவர்கள் செய்த மருத்துவ அறிக்கையை அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டது என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.  ஏற்கனவே ஜாமின் மனுவை 2 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


ABP Southern Rising Summit: தென்னிந்தியாவை கொண்டாடும் ”ABP Southern Rising Summit” - ஆளுநர் தமிழிசை, உதயநிதி, அண்ணாமலை பங்கேற்பு