ABP's Southern Rising Summit: புதிய இந்தியா தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான கருத்தரங்கு சென்னயில் இன்று நடைபெற உள்ளது.  


முன்னுதாரணமாக உள்ள தென்னிந்தியா:


இந்தியாவின் தென் மாநிலங்கள் வளர்ச்சி, நிர்வாகம், கல்வியறிவு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடாகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் நிலவும்,  விதிவிலக்கான முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை கொண்டாடுவதற்கும் ஆராய்வதற்கும், ஏபிபி நெட்வொர்க் 'தி சதர்ன் ரைசிங் சம்மிட் 2023' என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 


இந்த நிகழ்வில் வணிகம், அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் அறிவியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும், பிரமுகர்களை ஒரே மேடையில் ஏற்றி சுவாரஸ்யமான விவாதத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐந்து மாநிலங்களின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு, தென்னிந்தியப் பயணத்தின் சாராம்சங்களை வரையறுக்கும் தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் ஆளுமைகளைக் கொண்டாடும் வகையில் ஏபிபி நெட்வொர்க் இந்த ஒரு நாளை அர்ப்பணித்துள்ளது.


”ABP Southern Rising Summit”


”புதிய இந்தியா” தொடர்பான தங்களது கருத்துகளை தெரிவிக்கும் விதமாக, பல்துறை பிரமுகர்கள் பங்கேற்கும் ஏபிபி சார்பிலான “தெற்கின் எழுச்சி” என்ற பொருள்படும் ”ABP Southern Rising Summit” என்ற தலைப்பிலான கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.  இதில் அரசியல், தொழில்துறை, சினிமா, வணிகம், விளையாட்டு, அறிவியல் மற்றும் இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்று, அரசியலில் பெண்களின் பங்கு, பன்முகத்தன்மை மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்துகளை தெரிவித்து விவாதிக்க உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டலில் நடைபெறும் இந்த கருத்தரங்கு,  news.abplive.com , abpnadu.com மற்றும் abpdesam.com ஆகிய இணையதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.


அரசியல் சலசலப்புக்கு மத்தியில் கருத்தரங்கு:


தென்னிந்திய அரசியலில் நிலவும் பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது, சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து சர்சையானது மற்றும் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் போன்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியில் தென்னிந்தியாவின் எழுச்சி தொடர்பான இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதனால், அங்கு பல சுவாரஸ்யமான கருத்துகள் பகிரப்படுவதோடு, விவாதங்களும் நடைபெறும் சூழல் நிலவுகிறது.


ஆளுநர் தமிழிசை டூ அண்ணாமலை:



  • தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌவுந்தரராஜன், குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, ”ஆளுநரின் பங்கை மறுவரையறை செய்வது ” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்

  • சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்கு குறித்து தனது கருத்துகளைப் பகிர உள்ளார் 

  • நடிகர் ராணா டகுபதி திரைப்படங்களில் இந்தியாவின் பன்முகத்தன்மை குறித்து பேச உள்ளார். 

  • நடிகையும், இயக்குனருமான ரேவதி திரைத்துறையில் தனது 40 ஆண்டுகால அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்

  • புகழ்பெற்ற எழுத்தாளர் குர்சரண் தாஸ், இசைக்கலைஞர்கள் மகேஷ் ராகவன் மற்றும் நந்தினி சங்கர் ஆகியோர் சமகால பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள்

  • ”தமிழ்நாடு மாடலில் இருந்து இந்தியா என்ன கற்கலாம்?” என்ற தலைப்பில் அமைச்சர் உதயநிதி பேச உள்ளார்

  • இந்தியாவுக்கு ஏன் கூட்டாட்சி தேவை, அரசியலில் பெண்களின் பங்கு போன்ற பல்வேறு தலைப்புகளிலும் விவாதங்கள் நடைபெற உள்ளன

  • இதில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ், தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சென்னிமலை, நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்

  • நிகழ்ச்சியின் நிறைவாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் உள்ள வாய்ப்புகள், எதிர்க்கட்சிகளால் பாஜகவை வீழ்த்த முடியுமா என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது. இதில், பிஆர்எஸ் எம்எல்சி மற்றும் தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதா கல்வகுந்த்லா, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர்