சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரியை நீக்கக் கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை கிடைத்துள்ளது. மேலும், எஸ்எம்ஏ விற்கு செலுத்தப்படும் ஊசியின் விலை 16 கோடி ரூபாய், மட்டுமில்லாமல், கூடுதலாக இறக்குமதி வரி 6 கோடி ரூபாய் இந்திய அரசிற்கு செலுத்தப்பட வேண்டும். மொத்தம் ஊசியின் மொத்த மதிப்பு 22 கோடி ஆகும்.
இந்நிலையில், சிறுமி மித்ராவிற்கு செலுத்தப்படக்கூடிய ஊசியிற்கான இறக்குமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பலர் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கத்திற்காக இன்று காலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொலைபேசி வாயிலாக பேசினேன். உதவுவதாக தாயுள்ளத்துடன் பரிவோடு கூறியுள்ளார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, சிறுமி மித்ராவிற்கு உதவி செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வானதி சீனிவாசன் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வரும் சதீஷ் - பிரியா தம்பதியருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு குழந்தை பிறந்தது. தனது ஒரு வயது வரை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் சராசரி குழந்தையைப்போல விளையாடிக்கொண்டிருந்த மித்ராவின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் எலும்பு சம்பந்தமான பரிசோதனையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செய்துள்ளனர். பரிசோதனையின் முடிவில் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மித்ராவிற்கு முதுகுத்தண்டில் எஸ்.எம்.ஏ என்று சொல்லக்கூடிய அரிய வகை நோய் இருப்பதாகவும், அதை சரி செய்ய 16 கோடி மதிப்புள்ள ஊசி செலுத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றுள்ளனர். குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக, அதாவது 06 ஜூலை 2021-க்கு உள்ளதாக இந்த ஊசியானது செலுத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், க்யூர் எஸ்.எம்.ஏ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து குழந்தையின் மருத்துவ செலவிற்கு தேவையான 16 கோடியை மக்களிடமிருந்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக நன்கொடை திறக்கலாம் என யோசனை கூறியுள்ளார். கிரவுட் ஃபண்டிங் மூலம் தற்போது 16 கோடி வரை வந்துள்ளது. பிரபலங்கள் பலரும் மித்ரா மருத்துவ செலவிற்கு பணமாகவும், சிலர் வீடியோ பதிவிட்டும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் சத்யராஜ், பிரசன்னா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல பிரபலங்கள் உதவி உள்ளனர்.
இதற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு மாநில அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 6 கோடி இறக்குமதி வரியை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதைப்போலவே, மித்ராவுக்கு உதவ மாநில அரசிடம் பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை நேரில் சென்று மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆறு கோடி இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் மித்ராவின் பெற்றோர்.