மதுரையைச் சேர்ந்த 22 வயதான எம்.பி.ஏ. படிக்கும் பெண்ணும், அதேபகுதியை சேர்ந்த 20 வயதான இளங்கலை படிக்கும் பெண்ணும் தன்பாலின ஈர்ப்பாளர்கள். இதையறிந்த இரு பெண்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். இதனால், இரு பெண்களையும் ஒருவரை, ஒருவர் சந்திக்கக்கூடாது என்று கண்டித்துள்ளனர்.  இந்த நிலையில், தாங்கள் ஒன்றாக வாழ்வதற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும், தங்களின் பெற்றோர்கள் அதற்கு தடையாக இருக்கக்கூடாது என்றும் இரு பெண்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.



இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இதனால், மனுதாரர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என்றார். ஆலோசனை வழங்கப்பட்டால், அவர்கள் அறிவுப்பூர்வமாக இந்த வழக்கை அணுகுவதற்கு அது வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கலந்தாய்வு வழங்கும் சிறப்பு ஆலோசகர் பரிந்துரையின்பேரில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தற்போது இரு பெண்களும் சென்னையில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் உள்ளனர். துறைசார் நிபுணரான தினகரன், ஏப்ரல் 16-ஆம் தேதி சமர்ப்பிக்கவிருக்கிறார்.